இயற்கையின் பேராற்றலை உணரத்தொடங்கிய மனிதன், இயற்கை, தனக்குப் பலவகையில் உதவிகரமாக இருப்பதையும், அபாயமாக இருப்பதையும் உணர்கிறான்.
இயற்கையின் போக்கைப் புரிந்துகொள்ளவேண்டிய தேவை அவனுக்கு நிர்பந்தமாகிறது. இயற்கையைக் கண்டு அஞ்சுகிறான். புரிந்துகொள்ள முயல்கிறான். வெல்லவும் எத்தனிக்கிறான்.
வாழ்வின் புரியாத, தெரியாத விளைவுகளுக்குக், கருத்தியல் அளவிலும், எதார்த்தத்திலும் விடைகாண அவனுக்கு அவசியமாகிறது.
பிறப்பு – இறப்பும் கூட புரியாத போது, அதைப் பற்றிய சிந்தனை பிறக்கிறது. தன் உணர்வாக, இயற்கையோடு தனக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டுப் பயணத்தைத் தொடர்கிறான். அச்சம், எதிர்பாராத கடும்சேதங்களைத் தொடர்ந்து கவனித்து, சிலவற்றைச் செய்யும்போது அச்சமும், சேதமும் ஒழுங்கப்படுத்தப்பட்டன. அப்போதும் அகப்படாத விளைவுகளைக் கண்ணுறுகிறான். இயற்கையின் ஆற்றலை எதிர்கொள்ளும் தேவை இன்னும் அதிகமாகிறது.
தனக்கு மீறி நடப்பனவற்றை எப்படிக் கைக்கொள்வது என்ற தேடலில், ‘அச்சத்தில் இருந்து இறையும்’, ‘வெல்லும் முயற்சியில் இருந்து விஞ்ஞானமும்’, ‘இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை ஒன்றும்’ எழுகின்றன.
அந்த இறை என்ற கருத்துரு, பல செயல்பாடுகளுக்கு விடையாகவும், சமூகத்தை ஒழுங்குபடுத்தும் அம்சமாகவும் வளர்கிறது. மந்தைத்தன்மையை இயல்பூக்கமாகக் கொண்டுள்ள மனிதன், ஒத்த சிந்தனை உடையோருடன் கூட்டாக இணைகிறான்.
இணைந்த கூட்டம் தன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கான தேடலைத் தீவிரப்படுத்தியது. தன் கூட்டத்தின் நலனுக்காக,
இறை உணர்வு ஒழுங்குபடுத்தப்பட்டு, அதன் மீதான கருத்துருவாக்கங்கள் எழுகின்றன. கருத்துருக்கள், தத்துவமாக, பாடல்களாக, கலைகளாக வளர்கின்றன. இறை உணர்வு, சமூக நிறுவனமாகிறது. அந்தச் சமூக நிறுவனம், இறைமையை அதாவது தலைமையைத் தீர்மானிக்கிறது. சட்டதிட்டங்களை வகுக்கிறது. மக்களை வழிநடத்துகிறது. கட்டுப்படுத்துகிறது.
உடன்வளர்ந்த அதிகாரவர்க்கச் சிந்தனை இந்நிறுவனத்தை, அதிகார உருவாக்கத்திற்குச் சேவையாற்ற வைக்கிறது. பிற்காலத்தில், அது அதிகாரத்தின் கருவியாக மாறுகிறது. அதிகாரவர்க்கம், தன் தேவைக்கேற்ப புதிய நிறுவனங்களை இதேபோன்று உற்பத்தி செய்தன. இருக்கின்றவற்றை வளர்த்தும்விட்டன.
அந்த நிறுவனமே மதம்.
அதிகாரக் கட்டமைப்பு இனக்குழுவாக, நிலப்பிரபுத்துவமாக வளர்கிறது. அரசுகள் உருவாகின்றன. சிற்றரசுகள் பேரசுகளாக, காலனிய ஏகாதிபத்திய அரசுகளாக, முதலாளித்துவ சனநாயக அரசுகளாக நீடிக்கின்றன. மனிதக்கூட்டம் தன் வளர்ச்சிக்காக இணைந்து, தலைமையை உருவாக்கி உழைப்பை, பொருளை, உற்பத்தியைப் பகிர்ந்துகொண்டு, காலவளர்ச்சியில், சுரண்டலுக்கும் உள்ளாகியது. அதிகாரவர்க்கங்கள் மேலாண்மை செய்வது மாறி, மேலாதிக்கமாக உருவெடுத்து, மக்களை வழிநடத்தியது போய், கட்டுக்குள் வைத்து உற்பத்தியை வளர்த்தன. “உழைப்பின்றி உற்பத்தி இல்லை” என்பதை அதிகாரக் கட்டமைப்பு நன்றாகப் புரிந்து கொண்டது.
உற்பத்தியை, உபரியைத் தனதாக்கிக்கொள்ள உழைப்புச் சக்திகளைத் தந்திரமாகக் கையாள கருத்துருவாக்கங்களைக் கண்டுபிடித்து, நடைமுறைப்படுத்தி, வெற்றிகண்டன.
மதம் இதற்கு முக்கியமான கருவியாக இருந்தது. கோயில்கள் நீதிபரிபாலன மையமாகவும், கருவூலங்களாகவும், வரிவசூல் மையங்களாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக, கோயில்களே அதிகார நிறுவனங்களாகவும் இருந்தன.
உழைப்புச்சக்திகள் மனித இயல்பூக்கமான ‘புதியன கண்டுபிடித்தல்’ படி, தங்கள் நில, உற்பத்தி வகைமையில் கலைகளையும் உற்பத்தி செய்தன. அந்தக் கலைகள் வளர்ந்து பிற்காலத்தில் அதிகாரத்திற்குச் சேவையாற்றுமாறே அமைந்தன.
இயற்கையைப் புரிந்துகொள்ள, பலவித சடங்குகளைப் “போலச்செய்த” மனிதன், அவற்றைக் கலைகளாகவும் வளர்த்தான். இந்தப் “புத்தாக்க இயல்பூக்கத்தை”, அதிகாரவர்க்கம் தன்வசப்படுத்தி, இந்தப் புதிய கலைகளையும் அதிகாரக் கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டது.
மத உணர்வாக வளர்ந்த அச்ச, ஆன்மீக உணர்வும், நிகழ்த்துக் கலைகளாக வளர்ந்த புத்தாக்க உணர்வும் ஒழுங்கப்படுத்தப்பட்டு நிறுவனமயப்பட்டன. தன் வெற்றி தோல்விகளை அனுஷ்டிக்கத் தலைப்பட்ட இவை, பின்னாளில் விழவுகளாக, கொண்டாட்டங்களாகப் பரிணமித்தன.
தலைவனின் அதாவது இறைமையின் வெற்றி தோல்விகளை, புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டாடத் தொடங்குகிறான். அந்தக் கொண்டாட்டங்களும் நிறுவனமயப்படும்போது, வகைபிரிக்கப்படுகின்றன. ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
இன்று மக்கள் கொண்டாடும், வழகத்தில் இருக்கும் எல்லா விழாக்களுக்கும் இது பொருந்தும்.
புதிய கண்டுபிடிப்புகளை, உற்பத்தி ஈட்டங்களைக் கொண்டாட்டங்களாக்கி அது பின்னாளில் விழாக்களாக உருப்பெறும்.
அந்த விழாக்களின் மையமாக, நிலம், கண்டுபிடிப்பு, உற்பத்தி, போர் வெற்றி தோல்வி, சமய வழிபாடு உள்ளிட்ட வாழ்வியல்புகள் இருக்கும்.
தீபாவளி, இரண்டு இனக்குழுச் சண்டையாக, ஒருவர் இன்னொருவரை வெற்றிகொண்டதாக இருக்கிறது. திருக்கார்த்திகை, உழவு சார்ந்த சடங்காக, சிவராத்திரி, குலதெய்வ வழிபாடாக இருக்கிறது.
பொங்கல் பண்டிகை, உற்பத்தியைப் பெற்ற மகிழ்ச்சி நிகழ்வாக, நன்றி தெரிவிக்கும் விழாவாக இருக்கிறது.
இனக்குழுவாக வாழ்ந்த காலகட்டத்திலேயே, ஓர் இனக்குழுவுக்குப் பொதுவான அறம், பொதுவான வேலைத்திட்டம், வரையறைகள் வகுக்கப்பட்டு, வழக்கத்தில் வந்து அது பண்பாடாக நிலைபெற்று, அந்த இனக்குழுவை அடுத்தகட்டத்திற்கு இட்டுச் செல்லும்.
அந்தப் பழக்கவழக்கங்கள் மொழிப்பயன்பாடு, உணவுமுறை, உடை, கட்டிட அமைப்பு, கலை, சமயச்சார்பு உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாடாக மேலெழும்.
பண்பாடு காலந்தோறும் மாறக்கூடியது. நிலையான ஒன்றல்ல. வணிகம், படையெடுப்பு, சமய மாற்றம் உள்ளிட்ட கூறுகள் பண்பாட்டை மாற்றச்செய்யும். சில கூறுகள் பண்பு மாறாமல் வடிவ மாற்றம் பெற்று நீடிக்கும்.
தீபாவளி, சமணப்பண்டிகை என்ற பார்வையின்படி, அது இந்துமயமாக்கப்பட்ட பிறகும் சமணச் சடங்குகள் தொடர்வதைக் கவனிக்கமுடியும்.
படையெடுப்புகள், அரசு மாற்றங்கள், சமய மாற்றங்கள் நிகழும்போது ஒருபெரும் மக்கள் தொகுதி தனது பண்பாட்டை உடனடியாக மாற்றிக்கொள்ளாது. அதிகாரவர்க்கமும் வலுக்கட்டாயமாக அதை மாற்றாமல், மூலதனத்திற்குத் தேவையான பொருளியல் கட்டமைப்பாக மாற்றிக்கொள்ளும்.
பொங்கல் விழா தொடர்ச்சியான வேளாண்சடங்குகளின் முடிவுறு நாள்களில் கொண்டாடப்படுவது. ஆடியில் விதைத்து, புரட்டாசி மழையில் வளர்த்து, ஐப்பசி அடைமழையில் காத்து, கார்த்திகை சொக்கப்பனையில் பூச்சிகளை விரட்டி, பால்ப்பிடித்த பயிரின்,மார்கழிப்பனி வளர்ச்சியைக் கணித்து, தையில் அறுவடை செய்யும் அறுவடை நாள் இந்தப் பொங்கல்.
இந்திரனுக்கு இன்னொரு பெயர் போகி. மழை மற்றும் வேளாண் தெய்வமான இந்திரனை வணங்கி, புத்தரிசிப் பொங்கலிட்டு, கதிரவன், மாடுகளுக்கு நன்றி சொல்லி, ஆற அமரும் விழவு பொங்கல்.
இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1700 வருடங்களுக்கு மேலாக பல்வேறு வடிவங்களில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
“தமிழர் திருநாள்”, “தமிழ்ப் புத்தாண்டு” என்று சொல்லப்படும் அளவுக்கு தமிழ் நிலத்தோடு கலந்த விழா. தமிழகத்தின் முக்கியமான உணவுப்பொருள்களான அரிசிவகைகள், சிறுதானிய வகைகள், கரும்பு, இஞ்சி, மஞ்சள், கிழங்குவகைகள் என அத்தனையையும் உணவாக்கி மகிழும் விழா.
எத்தனையோ மதங்கள் புழக்கத்தில் இருந்தாலும், அரசுகள் மாறினாலும் இந்த விழாவின் மையம் மாறுதலுக்குள்ளாகாமல் சில வடிவமாற்றங்களோடு இன்றும் நீடிக்கிறது.
வேளாண்சடங்குகளே இவ்விழாவின் மையமாக இருப்பதால், வேளாண்மை மாற்றங்களுக்கு ஏற்ப வடிவ மாற்றம் பெறும்.
நவீன சனநாயக அரசுகளில் இதுபோன்ற விழாக்கள் முதலாளிய நலன்களுக்காக, பெருங்கொண்டாட்டங்களாக மாற்றப்படும். அசலான கொண்டாட்டங்களை மாற்றி அதை நுகர்வுக் கலாச்சாரமாக மாற்ற இந்த அரசுகள் முயலும்.
அரசின் தாக்கம் இருப்பது போலவே, அதன் முக்கியமான முதன்மைக் கருவியான மதங்களும் தன்பங்குக்கு இந்த விழாக்களை அசைக்கும். மாற்றத்தை விளைவிக்கும். விவாதங்களைக் கிளப்பும்.
பண்பாட்டின் ஓர் அம்சமான மதம், (ஆளும்வர்க்கத்தால்), தனக்கென ஒரு பண்பாட்டைக் கட்டியமைத்து மக்களை அணிதிரட்டப் பயன்படுத்தப்படும். பண்பாட்டு வழியான வாழ்வியலை, நிர்ணயிக்கும் அளவுக்கு மதம் ஒரு தனித்த பண்பாடாக இருக்கும். ஒருகாலத்தில் அரசு, மத மாற்றங்கள் பழைய பண்பாடுகளை உள்வாங்கி வளர்ந்தன. இப்போது தங்களுக்கென தனித்த பண்பாடுகளை உருவாக்கி, மக்களை ஒருங்கமைக்கின்றன.
பொங்கலும் இதற்குத் தப்பவில்லை
“மகரசங்கராந்தி” என தொண்ணூறுகளில் ஊடகங்களால் இந்தச் சமஸ்கிரதச் சொற்கள் பரவுகின்றன. பொங்கல் வைக்க உகந்த நேரங்கள் சொல்லப்படுகின்றன. வேளாண்மைத் தொழில்கள் கார்ப்பரேட் மயமாக்கப்படுகின்றன. உலக முழுவதும் மேலெழுந்த இஸ்லாமிய அரசியல் உருவாக்கம், அடையாள அரசியல் எழுச்சி, பொங்கல் விழாவிலும் செல்வாக்கு செலுத்தின.
வேளாண்மையில் இருந்து விலக்கப்பட்ட/விலகியோரும், நிலம் இல்லாத, பறிக்கப்பட்டோரும், நகர்மயமும் “நில விழாவான” இந்தப் பொங்கலை ஒருசாரரிடம் அந்நியப்படுத்தின. ஒருசாரரை ஒப்புக்குப் பங்கேற்க வைத்தன. ஒருசாரரை நிராகரிக்க வைத்தன.
இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இந்த விழாவினை முற்றாக விலக்கவும் இல்லை. கொண்டாடவும் இல்லை. அதற்கு இவர்கள் ஏகிய மதங்கள் காரணமென முடித்துவிட முடியாது. ஒருபுறம் வேளாண், நில விழாவான பொங்கல் இந்துமயமாக்கப்படுவதும் நடக்கும்போது, மதச்சிறுபான்மையினர் தள்ளிநிற்க சூழல் அமைந்துவிடுகிறது.
சமத்துவப் பொங்கல், மதமில்லாப் பொங்கல் போன்ற முழக்கங்கள் இந்த விவகாரத்தை விவாதத்துக்குட்படுத்துகின்றன.
வேளாண்மையோடு தொடர்புடைய அனைவரும் இந்த விழாவை எதாவது ஒருவகையில் பின்பற்றுகின்றனர். வேளாண்மை, முற்றாகக் கார்ப்பரேட் மயமாகும்போது இந்த விழாக்கள் இன்னும் மதவிழாக்களாக மாறக்கூடும். ஏனென்றால் ஆளும்வர்க்கத்திற்கு இந்தக் கொண்டாட்டங்கள் பொருளியல் சுரண்டலுக்காகத் தேவை. உளவியலாகவும், வாழ்வியலாகவும் இந்த விழாக்களை அணுகும் எளிய மக்கள் வாழ்வியலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழ்வைத் தொடர்வார்கள்.
பொங்கல் மதவிழா இல்லை. ‘வேளாண் சடங்குகளும், நிலத்தின் பண்பாடுமே’ பொங்கல் விழாவின் முதன்மை. ஆனால் வேளாண்மையும், பண்பாடும் மாறுதலுக்குட்படும்போது பொங்கல் விழாவும் மாறுதலுக்குள்ளாகிறது.
“எளிய மக்களின் வாழ்க்கைக்கான போராட்டம் தொடர்கிறது. போரை, லாபப்போட்டிகளைப் புறந்தள்ளி, பொருளைப் பொதுவாக்க, எல்லோரும் எல்லாமும் பெறுவது” ஓர் இலட்சியம்.
கார்ப்பரேட் மயத்தைப் புரிந்துகொண்டு, மதங்களின் செல்வாக்கைக் கணக்கில்கொண்டு உற்பத்தியை மக்கள் மயப்படுத்தும்போது சடங்குகள் மறைந்த, துருவமுனையாக்கல் அற்ற, ஏற்றத்தாழ்வு இல்லாத கொண்டாட்டங்கள் பிறக்கும்.
பொங்கல் அப்படியான ஒரு கொண்டாட்டமாக இருக்கக்கூடிய அம்சங்களைக் கொண்டது.
சமயம் கடந்து, வர்க்கபேதம் இல்லாத பொன்னுலகைச் சமைக்க உறுதியேற்போம்.
கட்டுரையாளர்- ரபீக் ராஜா..