சுதந்திரப் பிரட்சனை புறக்கணிக்கப்படுகிறது.
இந்தக் கோரிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்திலுள்ள ஒரு குறையைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. தேசத்தின் பரிபூர்ண சுதந்திரம் அதன் திட்டத்தில் இடம்பெறவில்லை. ஆலயப்பிரவேசம் வேண்டும் என்ற பால்ய பருவத்தை தாண்டி விட்டது அவர்களுடைய இயக்கம். அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்கின்றது. ஆனால் இந்த அதிகாரத்தை பிரிட்டிஷாரிடத்திலுருந்தே கைப்பற்ற வேண்டும். இந்த உணர்ச்சியை பிரதிபலிக்கும் அம்சம் சம்மேளனத்தின் திட்டத்தில் காணப்படவில்லை.
இந்திய மக்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்றால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நம்முடைய ஒன்றுபட்ட சக்தியால் தாக்க வேண்டும். அதுவே அதிகாரத்தில் தீண்டாதவர்களுக்கு உரித்தான பங்கை அளிக்கும். இது தெளிவான விஷயம் என்றாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்தின் திட்டத்தில் சுதந்திரம் என்ற வார்த்தையே காணப்படவில்லை. அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியா பரிபூரண விடுதலை அடைவதை அவர்களுடைய திட்டம் காணவில்லை. அதற்கு மாறாக இருக்கிறது டாக்டர் அம்பேத்காரின் பிரசங்கங்கள். டொமினியன் அந்தஸ்து என்ற எல்லைக்குள்தான் அவர்கள் விடுதலையைக் காண்பதாக தோன்றுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் பிரிட்டிஷ் ஆட்சி இந்நாட்டில் நீடித்திருக்கும் என்ற எண்ணத்துடன் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் பிரிட்டிஷாரிடம் இருந்து நாம் கைப்பற்றும் அதிகாரத்தில் ஒரு பங்கை இந்த கோரிக்கைகள் கேட்கின்றன. இந்த அதிகாரத்தை பிரிட்டிஷார் விட்டுக் கொடுக்கும்படி செய்வதற்கான திட்டம் ஒன்றும் சம்மேளனத்துக்குக் கிடையாது. பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் தயதாட்சன்யத்தால் கொடுக்கும் அதிகாரத்தில் ஒரு பங்கை மட்டும் எடுத்துக் கொண்டு திருப்தியடைந்து விட பார்க்கின்றனர்.
இன்றைய நிலையில் மன்னிக்க முடியாது.
தீண்டாதவர் இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில் இத்தகைய மனோபாவத்தினால் அதிக பாதகம் ஏற்படாது என்றிருக்கலாம். ஆனால் இன்றைக்கு சம்மேளனத்தின் கொடியில் பரிபூர்ண சுதந்திரம் என்ற சுலோகம் பொறிக்கப்படாமல் இருப்பது மன்னிக்கப்பட முடியாத விஷயம். அப்படி செய்யாமல் இருப்பதற்கு யாதொரு காரணமும் கிடையாது. சுதந்திரப் பிரச்சனையில் பாராமுகமாக இருப்பது தீண்டாதவர்களுடைய நலனுக்கே பாதகமாகும். தீண்டாமையை ஒழிப்பதற்கு பரிபூரண சுதந்திரமும், தீண்டாதவர்களுக்கு அதிகாரத்தில் தங்களுக்கு உரித்தான பங்கை எடுத்துக் கொள்வதும் அவசியம் என்பது தெட்டத் தெளிவான விஷயம். தீண்டாதவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நாளைக்கே பூர்த்தி செய்யப் பட்டாலும் தீண்டாமை ஒழியாது. தீண்டாமையெனும் பழக்கத்தின் மீது பெரிய இடி விழும். ஆனால் அது அழிக்கப்படமாட்டாது. தற்போது அமுலில் இருக்கும் அரசியல் சட்டத்திற்குள் ஆறுகோடி தீண்டாதவர்கள் எப்படி “ஸ்பெஷல் செட்டில்மெண்ட்களில்” குடியமைக்கப்படுவார்கள்? எப்படி உத்தியோகங்களில் இடம்பெறுவதற்கு முடியும்?.
தேசம் அதிசீக்கிரத்தில் தொழில்மயமாக்கம் படவேண்டும். நிலச்சுவான்தாரி முறை கரைக்கப்பட்டு ஒழியவேண்டும். விவசாய முறையில் புரட்சிகரமான மாறுபாடு புகுத்தப்பட வேண்டும். இவைதான் தீண்டாதவர்கள் தாங்கள் ஜீவனம் செய்யும் சுயேச்சை தொழில்களை தேட வசதி அளிக்கும். இவற்றால்தான் தீண்டாமையை ஒழிக்கப்படும். இதற்கு அந்நிய ஆட்சியின் பிடிப்பிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் இதை எப்படி பார்க்காமல் இருக்க முடியும்? நாட்டின் அடிமைத்தனத்தை நீடிப்பது தீண்டாதவர்களின் அடிமைத்தனத்தை நீடிப்பதாகும்.
இந்த சம்மேளனம் சுதந்திரக் கோரிக்கையை எதிர்க்கவில்லை. கான்பூரில் நடந்த மகாநாட்டில் தலைமை வகித்த ராவ்பகதூர் சிவராஜ், “நாங்கள் இந்திய சுதந்திரத்திற்கு எதிராக நிற்க வில்லை,ஆனால் நாகபுரி சம்மேளனத்தில் நாங்கள் கோரிய கோரிக்கைகள் அளிக்கப்படும் என்ற உறுதிமொழி வேண்டுமென்கிறோம்” என்று கூறியிருக்கிறார். ஆனால் “நாங்கள் சுதந்திரத்தை எதிர்க்கவில்லை” என்று கூறி விட்டால் போதாது. மற்ற மக்களுடன் சேர்ந்து போராடி சுதந்திர லட்சியத்தை அடைய வேண்டும் என்று உணரவேண்டும். தீண்டாதவர் கோரிக்கைகளை பெறுவதற்கு அது அவசியமான வேலை..
சுதந்திரத்திற்காக ஒன்றுபடுங்கள்..
ஆலயப்பிரவேசம் என்ற லட்சியத்தில் இருந்து அரசியல் அதிகாரம் வேண்டும் என்று கூறும் அளவுக்கு தீண்டாதவர் இயக்கம் வளர்ந்துவிட்டது. மற்ற கட்சிகளிடத்தும் மற்ற பொதுஜனப் பகுதிகளின்பாலும் இதுவரை அனுஷ்டித்து வந்த கொள்கையையும் மாற்றிக்கொள்ளவேண்டும். இதை கான்பூர் கூட்டத்தில் அம்பேத்காரே ஒருவாறு ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மூன்று பகுதிகள் அதிகாரத்தில் பங்கு எடுத்துக்கொள்ளும் அவை ஹிந்துக்கள், முஸ்லிம்கள், தீண்டாதவர்கள். 30/1/44.
சுயராஜ்ஜியம் அடைவதற்கு முன்னரே அதைப் பெறுவதற்கு இம்மூன்று கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம் அல்லவா? தேசிய காங்கிரசுக்கும், தீண்டாதவர்களுக்கும் இடையில் சௌஜன்யமான தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் இரு கட்சிகளுக்கும் பாதகம் ஏற்படும். இந்திய சுதந்திரத்திற்கே அது பாதகம் விளைவிக்கும். அதிகாரத்தை கைப்பற்றுவதும் தீண்டாமையை ஒழிப்பதும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றவேண்டிய செய்கைகள். ஏனெனில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்தும் செய்கை அது. ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்காக எல்லா மக்களுடைய கூட்டு முயற்சி அவசியம். தனித்தனியாக முயற்சி செய்வது வெற்றியை அளிக்காது.
நமது நாட்டின் பொதுஜனங்கள் பலர் தேசிய காங்கிரசின் கீழ் நிற்கின்றனர். தொழிலாளிகள், விவசாயிகள், படிப்பாளிகள் முதலியவர்கள் அதில் திரண்டுநின்றனர். அவர்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் அதிகாரம் பெற முடியாது. அதனால்தான் தீண்டாதவர்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு காங்கிரஸின் ஆதரவைப்பெற வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவமும், காந்திஜி எதிர்ப்பு மனோபாவமும் மற்ற மக்களிடம் இருந்து அவர்களை பிரித்து வைத்துவிடும்.
எல்லா கட்சிகளும் ஒன்று பட்டால்தான் இந்தியா சுதந்திரம் அடைய முடியும். தீண்டாதவர்களும் அதிகாரத்தில் ஒரு பங்கை பெற முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தேசிய காங்கிரசிடம் அனுஷ்டித்து வரும் போக்கை இந்த உணர்ச்சியினால் அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். தேசிய காங்கிரஸின் கொடியின் கீழ் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சரித்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும். தொழிலாளிகள், விவசாயிகள் இயக்கங்கள் தீண்டாதவர் இயக்கத்துக்கு அருகேயுள்ள இயக்கங்கள். தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுடைய வர்க்க ஸ்தாபனம். ஜாதி, மத பேதமின்றி அந்தந்த வர்க்கத்தின் கோரிக்கைகளின் மீது தொழிலாளிகளையும், விவசாயிகளையும் ஒன்று படுத்தி கட்டப்பட்ட ஸ்தாபனங்கள் அவை. தீண்டாதவர்களில் பெரும்பான்மையோர் இவ்விரு வர்க்கங்களிலும் இருக்கின்றன. தொழிற்சங்கங்களிலும், விவசாயிகள் சங்கங்களிலும் சேர்ந்து அந்த ஸ்தாபனங்களை பலப்படுத்தி, அவர்களுடைய அன்றாட கோரிக்கைகளுக்கு போராட வேண்டியது இந்த தீண்டாதவர்களின் கடமை.
இவ்வாறாக தொழிலாளர்களிடையிலும், விவசாயிகளிடையிலும் ஒன்றுசேர்ந்து நிற்பதன் மூலம் தங்களுடைய வகுப்பு கோரிக்கைகளை அடைவதற்கான நிர்பந்தத்தை அதிகரிக்கவும், துரிதப்படுத்தவும் முடியும் என்பதை இந்த வர்க்கங்களில் உள்ள தீண்டாதவர்கள் உணரவேண்டும். மற்ற கட்சிகள், மற்ற ஜனங்களை வற்புறுத்தி தீண்டாதவர்களுடைய விசேஷ உரிமைகளை சீக்கிரத்தில் அடைய முடியும். தன்னுடைய வர்க்க ஸ்தாபனத்தில் சேருவது தன்னுடைய கோரிக்கைகள் நியாயமானவை என்பதை அங்குள்ள தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். தீண்டாதவர் இயக்கத்தின் முக்கியத்துவத்தை இதுவரை தேசிய இயக்கம் சரிவர புரிந்து கொள்ளவில்லை. அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தேசிய ஸ்தாபனத்தின் கோரிக்கைகளாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இதன் விளைவு தேசிய இயக்கத்திற்கு சாதகமானதாக இல்லை. தீண்டாதவர்கள் விழிப்படைந்தனர். தங்களுடைய தேவைகளை உணர்ந்தனர். அதற்காக தனி ஸ்தாபனத்தை அமைத்துக் கொண்டுவிட்டனர். இன்று அதிகாரம் வேண்டும் என்ற உணர்ச்சியும் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் நடந்து வந்த பாதை சுதந்திரப் பாதை.
இந்திய சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த ஒரு பகுதி இன்றைக்கு சுதந்திர ஒளிகண்டு விழிப்புற்று வருகின்றது. சுதந்திரத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் இதை வரவேற்க வேண்டும். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் தேசிய இயக்கம் தீண்டாதவர்களிடம் நம்பிக்கை ஊட்ட வேண்டும். சுதந்திர போராட்டத்திற்காக திரண்டு வரும் மாபெரும் வெள்ளப்பெருக்கில் அவர்கள் சேர்வதற்கு வழிதேட வேண்டும். பஞ்சத்தையும், அரசியல் நெருக்கடியையும் எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் அவர்கள் மிகவும் முக்கியமான பகுதி. தேசிய ஒற்றுமைக்காக தேசிய சர்க்காருக்காக நடைபெறும் போராட்டத்தில் அவர்களும் ஒரு முக்கியமான பகுதி.
தேசிய காங்கிரசும் பழைய கண்ணோட்டத்தை விட்டுவிடவேண்டும். இப்பிரச்சனையை அரசியல் சம்பந்தமற்ற ஒரு பிரச்சினையாக கருதக்கூடாது. தானதருமம், கருணை கடாக்ஷத்திற்காக செய்யும் சேவையாக தீண்டாமை ஒழிப்பை கருதக்கூடாது. ஒற்றுமை, நியாயம் இவ்விரண்டும் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய பிரச்சனை இது என்று கருத வேண்டும். அப்படிச் செய்தால் அதிசீக்கிரத்தில் சுதந்திர இயக்கத்தின் அணிவகுப்பில் “பறையர்கள்” எனப்படும் கோடிக்கணக்கான இந்திய புரட்சிக்காரர்களை சேர்க்க முடியும்.
முற்றும்..
அனுபந்தம் ..
1. டாக்டர் அம்பேத்கார் மகாத்மா காந்திக்கு தாழ்த்தப்பட்டவர் பிரச்சினையைப்பற்றி சமீபகாலத்தில் ஒரு கடிதம் எழுதினார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு இந்து-முஸ்லிம் பிரச்சனையை தீர்ப்பது மட்டும் போதாது தீண்டாமை பிரச்சனையும் தீர்க்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். தேசத்தின் தலைவர்கள் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வழி தேட வேண்டும் என்று அவர் வற்புறுத்தி இருந்தார். அதற்கு மகாத்மா காந்தி கீழ்க்கண்ட பதிலை எழுதி இருக்கிறார்.
உங்கள் கடிதத்திற்காக என் வந்தனம். எனக்கு ஹிந்து முஸ்லிம் பிரச்சினை என் ஆயுள் பரியந்தம் நீடிக்கும் பிரச்சனையாகி விட்டது. அதை தீர்த்து விட்டால் இந்தியாவின் அரசியல் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நான் ஒரு காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தது சரியல்ல என்று அனுபவம் எனக்கு புத்தி புகட்டி விட்டது. நான் இளம்சிறுவனாக இருக்கும்பொழுதே தீண்டாமையை வெறுத்தேன். அந்தப் பிரச்சனை இன்று அரசியல் முக்கியத்துவம் அடைந்துவிட்டபோதிலும், ஒரு சமூக சீர்திருத்த பிரச்சனை, மதச் சீர்திருத்தப் பிரச்சனை என்ற முறையில்தான் அதைப் பற்றி எனக்கு அக்கறை அதிகம். ஆனால் இவ்விஷயத்தில் நம் இருவருக்கும் வேறுபட்ட அபிப்ராயம் உண்டு என்பதை நான் அறிவேன். (ஹிந்து 5/1/45).
2. 23/9/44 ல் சென்னையில் கூடிய அகில இந்திய தாழ்த்தப்பட்டவர் பெடரேஷனுடைய காரியக்கமிட்டி கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்கள்:
தனி உரிமைகள்
“இந்திய அரசியல் சட்டம் தாழ்த்தப்பட்டவர்களை ஒரு தனி அம்சமாக கருதாவிட்டால் அந்த அரசியல் சட்டத்தை அவர்கள் ஏற்க முடியாது. பட்ஜெட்டில் இந்த வகுப்பினருடைய கல்வி வசதிக்காக தொகை ஒதுக்கப்பட வேண்டும். சட்டசபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் அவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும். அரசாங்க உத்தியோகங்களில் அவர்களுக்கு குறிப்பிட்ட சில பதவிகள் அளிக்கப்பட வேண்டும்”.
தனித்தொகுதி
“தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ரிசர்வ்’ செய்து வைக்கப்பட்டுள்ள கூட்டுத்தொகுதி முறைக்கு பதிலாக தனித்தொகுதிகள் அமைக்கவேண்டும்”.
“மாகாணங்களிலும், மத்தியிலும் மந்திரி சபைகளில் மைனாரிட்டிகளுக்கும் இடம் அளிக்கப்படும்”.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு செட்டில்மென்ட்டுகள்.
“தற்காலம் தாழ்த்தப்பட்டவர் வசிக்கும் சேரிகளை விட்டு அவர்களுக்கென்று பிரத்தியேகமான குடிவாழும் பிரதேசங்கள் (செட்டில்மெண்ட்டுகள்) ஏற்படுத்தப்பட வேண்டும். இவை ‘ஜாதி இந்துக்களுடைய’ ஆதிக்கம் இல்லாத, சுதந்திர காலனிகளாக இருக்க வேண்டும். சாகுபடி செய்யக்கூடிய சர்க்கார் நிலங்களும், மராமத்து செய்த பின்னர் வாழக்கூடிய பிரதேசங்களும், அவசியமான இடங்களில் சட்டபூர்வமாக சில நிலங்களையும் வாங்கி செட்டில்மெண்ட்டு ஏற்படுத்தவேண்டும். அடக்கமான செட்டில்மெண்ட் ஏற்படுத்துவதற்கு 5 கோடி ரூபாய் வருஷா-வருஷம் செலவு செய்ய அதிகாரமுள்ள கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.
நன்றி : அணையா வெண்மணி காலாண்டிதழ்.