ஆறுகோடி தீண்டாதார்-தாழ்த்தப்பட்டோர் விடுதலை. பி.டி.ரணதிவே பகுதி-2

கட்டுரையின் தொடர்ச்சி….

தாழ்த்தப்பட்டவர் சம்மேளனம்.


சென்னையில் 29-9-44-ல் நடந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்தின் காரியக் கமிட்டி நடவடிக்கைகளை பார்ப்போம். அதைக் கவனித்தால் நம் நாட்டின் முக்கிய பகுதியான இந்த வகுப்பினருடைய அரசியல் நமக்கு நன்கு விளங்கும். சம்மேளனத்தின் தலைவர்கள், தீண்டாதவர்கள் அனைவருடைய ஆதரவும் தங்களுக்குத்தான் என்று கூறுகின்றனர். இது சரியா இருக்காது. ஆனால் இது முற்றிலும் சரியா இல்லையா என்பதல்ல பிரச்சனை. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்துக்கு அவ்வகுப்பினர்களில் பெருவாரியானவர்களுடைய ஆதரவு இருக்கிறது. தீண்டாதவர்கள் இடையே மலர்ந்த படிப்பாளிகள்தான் தீண்டாதவர்களுடைய தலைவர்கள். அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதையே அவ்வகுப்பினர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த படிப்பாளிகள் அனைவரும் இந்த சம்மேளனத்தில் இருக்கின்றனர். ஆதலால் தாழ்த்தப்பட்டவர் சம்மேளனத்தை அவர்களுடைய ஸ்தாபனமாக பலப்படுத்துவது தீண்டாதவர்களுடைய கடமை என்பதை மறுக்க முடியாது. சென்னையில் நடந்த சம்மேளனத்துக்கு ஆறு மாகாணங்களில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். அதில் வங்கத்திலிருந்து மாகாண மந்திரி ஒருவர். அசாமில் இருந்து இன்னொரு மந்திரி, ஆக இரண்டு மந்திரிகள் ஒரு பார்லிமென்டரி காரியதரிசி, 9 சட்டசபை அங்கத்தினர்கள். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் டாக்டர்கள், வக்கீல்கள், அல்லது பத்திரிகை தொழிலில் இருப்பவர்கள் ஒரே ஒருவர்தான் வர்த்தகர்.


தேசிய காங்கிரசிலும், முஸ்லிம் லீகிலும் தலைமை வகிக்கும் பகுதியை போன்ற பகுதியே, இச்சம்மேளனத்திலும் தலைமை வகிக்கின்றது என்பதையே இது காட்டுகின்றது. எத்தனையோ கஷ்டங்களை தாண்டி தீண்டாதவர்களில் ஒரு பகுதி கல்வி கற்றனர். அவர்களுடைய வகுப்பிலிருந்து மலர்ந்த இந்தப் படிப்பாளிகளில் தங்களுடைய தலைவர்களை கண்டுவிட்டனர். தீண்டாதவர்கள் அவர்கள் காட்டும் வழியில் தங்கள் ஸ்தாபனத்தை அமைத்து விட்டனர். அதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் இருக்கிறார். “நாங்கள் அரசாலும் வகுப்பாக வேண்டும்” என்று விரும்புகிறோம் என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். ஆறுகோடி தீண்டாதவர்கள் மனத்திலுள்ள எண்ணத்தை இந்த வாக்கியத்தின் மூலம் அம்பேத்கர் கூறிவிட்டார். இந்த விருப்பத்தை அநியாயமானது என்று யாரும் கூற முடியாது. அது தேசியத்துக்கு விரோதமானது என்றும் கூறமுடியாது. மற்ற ஜனங்களுடன் தங்களுக்கும் அரசாங்க நிர்வாகத்தில் ஒரு பங்கு உண்டு என்று ஆறுகோடி எண்ணிக்கையுள்ள ஒரு பகுதி விரும்புவது சர்வசாதாரணமான ஜனநாயக கொள்கை. சுதந்திர இந்தியா ஜனநாயக இந்தியாவாக இருக்க வேண்டும் என்றால் அரசாங்கத்தை நடத்துவதில் இந்த ஆறு கோடி மக்களுக்கும், அவர்களுக்கு உரித்தான பங்கை அளிக்க வேண்டும்.


உரிமைச் சாசனம்.


தீண்டாதவர்களின் லட்சியம் 1942 ஆம் வருஷம் நாகபுரியில் கூடிய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மகாநாட்டு தீர்மானத்தில் காணலாம். சமீபத்தில் கூடிய சென்னை கூட்டத்தில் அது ஊர்ஜிதப் படுத்தப் பட்டது அவர்கள் லட்சியத்தை அடைவதற்கு கீழ்க்கண்ட முக்கியமான கோரிக்கைகள் தீர்மானத்தில் போடப்பட்டன.

  1. நாட்டின் அரசியல் சட்டம் தீண்டாதவர்களை கலந்து வகுக்கப்பட வேண்டும்.
  2. இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் தீண்டாதவர்கள் ஒரு தனிப் பகுதியாக, விசேஷ பகுதியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  3. அவர்களுடைய எண்ணிக்கைக்குத் தகுந்தபடி தேவைக்கு தக்கபடி மத்திய நிர்வாகத்திலும், மாகாண நிர்வாகங்களிலும், சர்க்கார் உத்தியோகங்களிலும் அவர்களுக்கு பங்களிக்கும் சட்டம் வேண்டும்.
  4.  சர்க்கார் செலவுத்திட்டத்தில் தீண்டாதவர்களின் உயர்தரக் கல்வி வசதிக்குப் போதுமான பணம் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்.
  5. சர்க்கார் நிலங்களில் குடி வாழ்வதற்கு தனி “செட்டில்மெண்ட் கமிஷன்” அமைக்க வேண்டும். அந்நிலங்களில் தீண்டாதவர்கள் குடி வாழ்வதற்கு என்று செட்டில்மெண்டுகள் ஏற்படுத்த வேண்டும்.
  6. ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் சட்ட சபைகளுக்கும் தீண்டாதவர்கள் பிரிதிநிதிகள் தனித்தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


 இந்தக் கோரிக்கைகள் தேசிய இயக்கத்திற்கோ, ஜனநாயகத்திற்கோ விரோதமானவையா? தீண்டாதவர்கள், சமூகத்தில் ஒரு விசேஷ பகுதி என்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அரசியல் சட்டம் அவர்களுடைய அனுமதியுடன் வகுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை எடுத்துக் கொள்வோம்.இந்தக்கோரிக்கை ஏன் போடப்பட்டிருக்கிறது? எப்படி அந்த கோரிக்கை வந்தது என்பதை கவனிப்போம். தீண்டாதவர்கள் தாழ்த்தப்பட்ட அடிமைகளாக இருப்பதனால் இந்த கோரிக்கை வந்துள்ளது. காங்கிரசோ, ஹிந்து சமுதாயமோ அவர்களுடைய விசேஷ உரிமைகளுக்காகப் போராட வில்லை. அரசியல் துறையில் ஹிந்துக்கள் என்ற முறையில் ஹிந்து சமூகம் தீண்டாதவர்களுடைய நலன்களைக் காக்க முடியும் என்று கூறுவதை ஆட்சேபித்து கிளம்பியுள்ள கோரிக்கை அது. காங்கிரஸ் அவர்கள் சார்பில் பேசுகிறது என்பதையும் ஆட்சேபிக்கிறது.பிரிட்டிஷ் சர்க்கார் அவர்களை கலக்காமல் இதர கட்சிகளுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் தீண்டாதவர்கள் இந்துக்களால் நசுக்கப் படுவார்கள் என்ற பயத்தில் இருந்தே இந்த கோரிக்கை கிளம்பியிருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு விதிகள் வேண்டும் என்ற உணர்ச்சியால் ஏற்படுகின்றது.


பல்லாண்டுகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருக்கப்பட்ட பகுதியை, எங்கள் சமூகத்தின் தனிப்பட்ட பகுதி இல்லை என்று மனசாட்சியுடையவன் ஒருவனும் கூறமுடியாது. அரசியல் வாழ்க்கையில் அவர்களுக்கு தனிப்பட்ட ஸ்தானம் இருக்க வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது. காங்கிரஸ் அவர்களுடைய கோரிக்கைகளுக்காக தீவிர போராட்டம் செய்யவில்லை. அதனால் அவர்களுடைய லட்சியங்களை போதிய அளவுக்கு தேசிய காங்கிரஸ் பிரதிபலிக்கின்றது என்பதை யாரும் கூற முடியாது.


சந்தேகங்கள்.


காங்கிரஸ்காரர்களுடைய மனதில் தோன்றுவது என்ன? தீண்டாதவர்களின் தலைவர்களுடைய காங்கிரஸ் எதிர்ப்பு மனப்பான்மையை கண்டு சந்தேகம் கொள்கின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆட்சியை நீடித்து கொள்வதற்காக சமஸ்தான அதிபதிகளை தட்டிக் கொடுப்பதைப்போல், தீண்டாதவர்களையும் தம்முடைய சுதந்திரத்தை எதிர்க்கும் ரிசர்வ் பட்டாளமாக உபயோகிக்கும் என்று எண்ணுகின்றனர். தீண்டாதவர்களை தனிப் பகுதியாக ஏற்றுக் கொண்டு அரசியல் சட்டத்தை வகுக்க அவர்களுடைய சம்மதமும் வேண்டும் என்று ஒப்புக் கொண்டுவிட்டால் அவர்கள் எவ்வித முற்போக்கான அரசியல் நடவடிக்கையையும் தடுத்து விடுவார்கள், சுதந்திர பாதையின் குறுக்கே முட்டுக்கட்டையாக நிற்பார்கள் என்று அபிப்பிராயப் படுகின்றனர்.


தீண்டாதவர்களுக்கு அளிக்கப்படும் இச்சலுகையை ஏகாதிபத்தியம் நம்மிடையே உள்ள பிளவுகளை பயன்படுத்திக் கொள்ளும் என்று நினைக்கின்றனர். ஏகாதிபத்தியம் காங்கிரஸ் எதிர்ப்பு அணியை உருவாக்கி ஜனநாயக அரசியல் அமைப்பை உடைத்துவிடும் என்று எண்ணுகிறார்கள். இப்படி நினைப்பது தேசிய இயக்கத்தில் உள்ள ஒரு பலவீனத்தையே குறிக்கின்றது. எல்லாத்துறைகளிலும் சுதந்திரம் வேண்டும் என்று கோரும் காங்கிரஸ் ஆறுகோடி அடிமைகளை கண்டு அவர்களுடைய விடுதலைக் கோரிக்கையை கண்டு சற்றும் தயங்க வேண்டியதில்லை. சமஸ்தான அதிபதிகள் தங்கள் சுயநல சுரண்டலை காப்பாற்றுவதற்காக நிற்கும் சிறு கும்பல். அடிமைப்பட்டு கிடந்த பாமரர்களின் புரட்சி விழிப்பை பிரதிபலிக்கும் பகுதி தீண்டாதவர்கள். இந்தப் பகுதியை ஜனநாயக அரசியல் சட்டத்திற்கும்,சுதந்திரப் போராட்டத்திற்காகவும் திரட்டாமல், ஏகாதிபத்திய பிற்போக்கு லட்சியம் கொண்ட சுயநலமிகள் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ளும் படி விட்டுவிட்டால் அது தேசிய இயக்கத்திற்கே ஒரு அவமானம்.


சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டம் இந்த ஆறு கோடி மக்களின் சம்மதத்தைப் பெற்றாக வேண்டும். தொழிலாளிகள், விவசாயிகளுடைய சம்மதத்தைப் பெற வேண்டியிருப்பதை போலவே, தீண்டாதவர்களுடைய சம்மதத்தையும் பெற வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது.

 

இன்றைக்கே அதை ஏற்றுக்கொள்வது -அவர்கள் ஒரு விசேஷ பகுதி என்று ஏற்றுக்கொண்டு ஹிந்து மெஜாரிட்டியால் நசுக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி மொழியை அளிப்பது- சுதந்திரத்திற்காக நடைபெறும் பொதுவான போரணியில் அவர்களையும் அழைத்து இணைத்துக் கொள்வதற்கு அவசியம், நியாயத்தையும் ஜனநாயகத்தையும் முன்னிட்டு அது அவசியமாகின்றது. இப்படி செய்வதன் மூலமே ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி முறியடிக்கப்படும். சுதந்திர இந்தியாவில் தீண்டாமை என்ற தீமை இருக்காது என்ற உணர்ச்சியை தீண்டாதவர்கள் இவ்வழியிலேதான் உணர்வார்கள்.


கல்வித்துறையில் விசேஷ வசதிகளைக் கோருகின்றனர். உத்தியோகங்களிலும், சட்டசபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் போதிய பங்கு வேண்டும் என்று கேட்கின்றனர். இவைகளும் நியாயமான கோரிக்கைகள்தான். அவைகளை ஒரு வகுப்புவாத கோரிக்கைகளாகவோ, பிற்போக்கான கோரிக்கைகளாகவோ கருதக்கூடாது. தற்போதுள்ள சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான கோரிக்கைகள் என்பதை கவனிக்கவேண்டும்.

உத்தியோகங்களை இந்தியர் மயமாக்குவதும், ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைகளை அமைப்பதும் தம்மை தாழ்த்திவரும் தீண்டப்படுவோருக்கு பயனளிப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்.தீண்டப்படுவோரே பல உத்தியோகங்களை வகிக்கின்றனர், சட்டசபை பிரதிநிதிகளும் அவர்களே, அரசியல் அதிகாரமும் அவர்களுடையதே என்று கருதுகின்றனர். அதிகார அமைப்பில் தீண்டாதவர்களுடைய பிரதிநிதிகள் வேண்டும், இதற்கு வேண்டிய யோக்கியதையை தேடிக்கொள்ள விசேஷ கல்வி வசதிகள் வேண்டும் என்கிறார்கள்.எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என்று விரும்பும் கோரிக்கை அது. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள விசேஷ தடைகளை ஒழிக்க ஏற்படுத்தும் விசேஷ சலுகைகளின் மூலம் இந்த கோரிக்கையைப் பெறுவதற்கு வழி தேடுகின்றனர்.


நியாயமான கோரிக்கைகள்.


தீண்டாமையை ஒழிக்கும் போராட்டத்தில் விசேஷ கல்வி வசதிகளை ஏற்படுத்துவது ஒரு புரட்சித் தன்மை வாய்ந்த செய்கை. தீண்டப் படுவோரின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றால் தீண்டாதவர்கள் சுயேச்சையாக உத்தியோகங்களையோ, தொழில்களையோ தேடிக்கொள்ள வசதி வேண்டும். கிராமங்களில் தீண்டாதவர்களுக்கு நிலம் கிடையாது. வேறு ஜீவியம் கிடையாது. அதனால்தான் கிராமாந்திரங்களில் தீண்டாமை ஒழியவில்லை. கல்வி கற்றால் உத்தியோகங்களுக்கு வேண்டிய யோக்கியதையை அடைகின்றனர். வேறு தொழில்களை நடத்தும் திறமையைப் பெறமுடியும். இவ்வாறு ஜீவியம் நடத்த வழி திறந்து விடுகின்றது கல்வி. பிறரை எதிர்நோக்கி, பிறர் தயவில் வாழ்ந்த தீண்டாதவர்கள் சுதந்திரம் பெறுவதற்கு வழியை அளிக்கின்றது. தீண்டாமையின் வேர் பொருளாதாரத்தில். அந்த வேரை அழித்து விடுகின்றது கல்வி.தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்கள் அடிமைகளாக, பொருளாதார அடிமைகளாக வாழ வேண்டியதில்லை. கல்வி வசதியும் உத்தியோகங்களும் தனிப்பட்டவர் நிலைமையை உயர்த்தும் வழி மட்டுமல்ல, சமூக விடுதலை மார்க்கமாகவும் ஆகின்றன..


தேசிய காங்கிரசும் அதனுடைய இளம்பருவத்தில் இத்தகைய கோரிக்கையை போட்டிருக்கிறது. இந்தியர்களுக்கு நிர்வாகப் பதவிகள் வேண்டும், உயர்தரக் கல்வி வேண்டும் என்று காங்கிரஸ் ஏன் கேட்டது? இந்தியருக்கும் ஐரோப்பியருக்கும் இடையே எழுப்பப்பட்ட ஏற்றத்தாழ்வு சுவரை உடைத்தெறியும் கருவிகளாக அவை கருதப்பட்டன. தீண்டாதவர்கள் கோரிக்கையும் அதே நோக்கத்துடன் இன்று போடப்படுகின்றன. தற்போது உள்ள ஹிந்து கிராமங்களில் ஒதுக்கப்பட்டு சேரிகளில் வாழாமல் சர்க்கார் மானியத்தில் பயிர்செய்து வாழ்க்கை ஸ்தளங்களை (காலனிகளை) ஏற்படுத்துவதற்கு விசேஷ செட்டில்மெண்ட்டுகளை சம்மேளனம் கோருகின்றது. தீண்டாதவர்கள் மிகப் பெரும்பான்மையோருக்கு சொந்தமான நிலம் கிடையாது. அவர்கள் நிலமில்லாத விவசாய கூலிகள். ஜீவனம் செய்வதற்கு கிராமத்தில் உள்ள இதர ஹிந்துக்களின் தயவை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சிறிய பகுதிதான். இதர தீண்டப்படுவோர் ஆதரவில்லாமல் எவ்வித வியாபாரத்தையும் அவர்கள் நடத்த முடியாது. தங்கள் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கான எந்த தொழிலையும் சுயேச்சையான தொழிலையும் அவர்கள் நடத்த முடியாது. கிராமங்களில் இதுதான் தீண்டாமையை நீடித்து வைக்கிறது.


சர்க்கார் நிலங்களிலிருந்து அவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டால், அந்த மானியங்களில் சுதந்திர சமூகங்களாக அவர்கள் அமைக்கப்பட்டால், அவர்களுடைய வகுப்பிலிருந்து வியாபாரிகளையும் வர்த்தகர்களையும் பிறப்பிக்க முடியும். பொருளாதார முன்னேற்றத்தில் தாங்களும் சுதந்திர மனிதர்களாக பங்கெடுத்துக் கொள்வதை உணர்வார்கள். இதுதான் தீண்டாமையை தாங்கி நிற்கும் அச்சுவேரை பெயர்த்தி விடும். தாழ்த்தப்பட்ட இந்த மனித சமூகம் இந்திய சுதந்திரப் போராட்ட அணிவகுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டவர்கள் அனைவரும் இந்த நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க கடமைப்பட்டவர்கள்..


தனித்தொகுதி.


தனித்தொகுதி கோரிக்கையை எடுத்துக்கொள்வோம். தனித்தொகுதிகள் வகுப்பு பிரிவினைகளை நீடித்து வைத்து, வகுப்புவாதத்தை வளர்த்து வரும் என்று தேசியவாதிகள் நினைத்து வருகின்றன. தேசிய இயக்கத்திற்கு எதிரான மனோபாவத்தை பரப்ப பிற்போக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் கருவி, தனித்தொகுதி என்று கருதுகின்றனர். நம்முடைய சுதந்திரப்போராட்டத்தில் பொதுத் தொகுதியா, தனித்தொகுதியா என்ற பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக சர்ச்சை செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் விஷயத்தில் அது பொதுமக்கள் முன்வந்தன. காங்கிரஸ் பொதுத் தொகுதி தான் இருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு வந்திருக்கிறது. தனித்தொகுதி வேண்டும் என்பவர்களுடைய மனதை மாற்ற முடியாமல் போன பிறகுதான், வேறுவழியின்றி தனித் தொகுதியை கொடுக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டிருக்கிறது.தேசியப் போராட்டத்தில் முஸ்லிம்கள் தனித் தொகுதிகளை பெற்றனர். 1935ஆம் வருட அரசியல் சட்டத்தின்படி தீண்டாதவர்களுக்கும் தனித்தொகுதி அளிக்கப்பட்டது. ஆனால் காந்திஜி உண்ணாவிரதம் பூண்டார். கடைசியாக பூனா ஒப்பந்தத்தின் மூலம் இந்துக்களுடன் பொதுத் தொகுதிகளில் தீண்டாதவர்களையும் சேர்த்து வைத்துக்கொண்டார்.


இன்றைக்கு அந்த ஏற்பாட்டை விட்டுவிட வேண்டும் என்று தீண்டாதவர்கள் விரும்புகின்றனர். தனித்தொகுதி தான் வேண்டும் என்கிறார்கள். அது வகுப்புவாத கோரிக்கையா? தேசிய எதிர்ப்பு கோரிக்கையா? தற்போது உள்ள பிரிவினைகளை நீடித்து வைக்கும் உபாயமா, அல்லது அவற்றை ஒழிக்கும் வழியா? இந்தக் கோரிக்கை ஏன் கிளம்ப வேண்டும்? தீண்டாதவர்களுக்கு உண்மையான குறை ஒன்று இருக்கின்றது. சர்வ சாதாரணமான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்களை மனிதத்தன்மையற்ற முறையில் சமூகம் நடத்தி வந்திருக்கிறது. அவர்களுடைய நலன்களுக்காக எந்த ஸ்தாபனமும் -தேசிய காங்கிரஸ் கூட- போராடவில்லை தங்களுடைய உரிமைகளுக்காக போராடுவதற்கு வேண்டிய பாதுகாப்பை கோரும் ஒரு தாழ்த்தப்பட்ட பகுதி அவர்கள். ஜாதி ஹிந்துக்கள் விரும்பும் தீண்டாதவர்களையே பிரதிநிதிகளாக்க பொதுத் தொகுதிகள் வசதி அளிக்கின்றன. பல கிராமங்களில் சிதறிக்கிடக்கின்றனர். அந்த கிராமங்களில் எல்லாம் ஜாதி ஹிந்துக்கள்தான் மெஜாரிட்டி. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் விரும்பாத எந்த நபரையும் ஜாதி ஹிந்துக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க முடியும். எந்த தொகுதியிலும் யார் பிரதிநிதியாக வரலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஜாதி ஹிந்துக்களிடம் தான் இருக்கிறது.


இப்பேர்பட்ட ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று தீண்டாதவர்கள் விரும்புகின்றனர். சீட்டுகள் ரிசர்வ் செய்யப்பட்ட கூட்டு தொகுதிகளில், சென்ற தேர்தல் அனுபவம் அவர்களுடைய மனதில் மனக்கசப்பை ஏற்படுத்திவிட்டது. சென்ற தேர்தலில் ஜாதி இந்துக்களால் நியமனம் செய்யப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது சுமத்தப்பட்டனர். கூட்டுத் தொகுதி இதற்கு சாதகமாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுடைய ஓட்டுகள் உதவியாய் இருந்தன. கூட்டு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அபேட்சகர்கள் கிராம கிணறுகளையும், ஹோட்டல் களையும், பொது ஸ்தலங்களையும் தீண்டாதவர்களுக்கு திறந்து வைப்பதற்காக எவ்வித முயற்சியும் செய்யவில்லை. காங்கிரஸ் மந்திரி சபையும் இதற்கு உதவவில்லை. தேசிய இயக்கம் தீண்டாதவர்களுடைய நம்பிக்கையை பெறவில்லை. தீண்டாதவர்களுக்கு இந்த அனுபவம் ஏமாற்றத்தை அளித்தது. அவர்களுடைய நியாயமான நலன்களை காப்பாற்ற அவர்கள் இன்றைக்கு தனித் தொகுதிகளை கேட்கின்றனர். அப்படிக் கேட்பது யாருடைய குற்றம்? தீண்டதவர்களுடைய குற்றமா? தேசிய இயக்கத்தின் குற்றமா? தேசிய இயக்கம் தங்களுடைய நலன்களை காப்பாற்றுவதற்காக போராடும் ஸ்தாபனம் என்ற உணர்ச்சியை நடைமுறையில் ஏற்படுத்தி இருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இந்த கோரிக்கையை போட்டு இருக்க முடியாது.


இன்றைக்குள்ள நிலைமை என்ன? காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட வகுப்பினருடைய நம்பிக்கையை பெறவில்லை. ஒரு பகுதிக்கும் மற்றொரு பகுதி க்கும் இடையே பூரண நம்பிக்கை இல்லாத நிலைமையில் கூட்டு தொகுதிகளை ஏற்படுத்துவது அவநம்பிக்கையை பெருக்குகின்றது. இதனால் பிளவை அதிகரிக்கின்றது. சீர்குலைவை வளர்க்கும். ஜாதி இந்துக்களின் ஆதிக்கத்தை நீடிக்கும் சூழ்ச்சி என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கருதுவார்கள். தனித்தொகுதி வேண்டுமா, அல்லது கூட்டுத் தொகுதி வேண்டுமா, என்பதை முடிவு செய்து கொள்வதற்கு தீண்டாதவர்களுக்குப் பரிபூரண சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதுவே நியாயம். அதுவே ஜனநாயகம். பிற பகுதிகள் அவர்கள் மீது கூட்டு தொகுதியை புகுத்துவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. தனித்தொகுதி கோரிக்கையின் காரணத்தை உணர்ந்து அதன் நியாயத்தை ஏற்றுக் கொள்வதற்கு காங்கிரஸ் முன்வர வேண்டும். ஜனநாயகத்தை முன்னிட்டு அதை ஆதரிக்க வேண்டும். தேசிய இயக்கம் என்றென்றும் அவர்களுடைய நலன்களை பாதுகாக்கும் என்ற களங்கமற்ற ஒரு உறுதிமொழியை காங்கிரஸ் அளிக்க வேண்டும்.

இப்படி திட்டமிட்டால்தான் ஏகாதிபத்தியவாதிகளும் பிற்போக்காளர்களும் இந்த நிலைமையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் தடுக்க முடியும். தீண்டாதவர் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் காங்கிரஸ் இணைத்து விட்டவுடன், காங்கிரஸ் அவர்களுடைய நம்பிக்கையை பெற்று விட்டவுடன் பிற்போக்காளர்களுக்குச் சாவு மணி அடித்து விடலாம். தீண்டாதவர் வகுப்பிலிருந்தே அவர்களுடைய நலன்களை காத்து தேசிய நலனுக்காக போராடும் வீரர்கள் உதிப்பார்கள். காங்கிரசின் கராசிச்சி தீர்மானம் பிரஜா உரிமை சமத்துவப் பிரகடனம் செய்தது. அதை அமுலுக்கு கொண்டு வரும் வழி இப்பேர்ப்பட்ட கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு போராடுவதாகும். நியாயத்தில் இருந்தும், தார்மீகத்திலிருந்தும் பிறந்துள்ள கோரிக்கைகள் தாழ்த்தப்பட்டவர்களுடைய கோரிக்கைகள். தேசிய காங்கிரஸ் இவற்றை எடுத்துக் கொள்வதில் சிரத்தை காட்டி இருந்தால் தீண்டாதவர் இயக்கம் சுதந்திரப் போராட்டத்துடன் கலந்த ஒன்றாய் சேர்ந்திருக்கும். தேசிய இயக்கத்தின் போராட்ட சக்திகள்,பலமடைந்திருக்கும். ஒடுக்கப்பட்ட மனித வர்க்கத்தின் பகுதியாகிய இந்த 6 கோடி மக்களும் தேசிய கொடியின் கீழ் தேசிய இயக்கத்திற்கு ஆதரவாகத் திரட்டப்பட்டிருப்பார்கள்.


தொடரும்..

Leave a Reply