ஆறுகோடி தீண்டாதார்-தாழ்த்தப்பட்டோர் விடுதலை. பி.டி.ரணதிவே பகுதி-1

BT- RANADIVE

கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ அங்கத்தினர் தோழர்.பி.டி.ரணதிவே எழுதிய இந்தக்கட்டுரை 1945-பிப்ரவரியில் தோழர் பி. ராமமூர்த்தியால் அச்சிடப்பட்டு ஜனசக்தி இதழில் வெளியிடப்பட்டது. தமிழில் மொழிபெயர்த்தவர் தோழர் சி.எஸ்.சுப்பிரமண்யம்.

மொழிபெயர்ப்பாளர் முகவுரை..

இந்தச் சிறு வெளியீடு தாழ்த்தப்பட்டவர் நிலைமையை பற்றியது. 6 கோடி மக்கள் பொருளாதாரத்துறையில் அடிமைப்பட்டு தங்கள் இஷ்டப்படி வேலை செய்து வயிற்றை வளர்க்க வசதியற்றிருக்கின்றனர். அவர்கள் சமூக அந்தஸ்தும் தாழ்த்தப்பட்ட அந்தஸ்து. சுதந்திர ஒளி எல்லாப் பகுதிகளின் மீது  வீசும் சமயத்தில், அவர்களுடைய சுதந்திர உணர்ச்சியும் வளர்ந்து வருகின்றது.  தமிழ்நாட்டில் இப்பிரச்சனை விசேஷ முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை. காந்திஜி தீண்டாமை ஒழிப்பு வேலையில் தென்னாட்டுக்கு தனிப்பங்கை வற்புறுத்தி இருக்கின்றார். இதனால் தமிழ்நாட்டில் வேலை செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இப்பிரச்சனையை நன்கு உணர்ந்தாக வேண்டும். இது விஷயமாக திட்டவட்டமான ஒரு அரசியல் கொள்கை அவசியம். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் கூறுவது இதுதான்;

இவ்விஷயத்தில் முற்போக்கான தேசிய கட்சிகள் ஒரு அரசியல் கொள்கையை நியாயமான முறையில் வகுக்கவேண்டும்.  தீண்டாமைக்கு பொருளாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள அஸ்திவாரத்தை உணர வேண்டும் என்று விரும்புகின்றோம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இந்த வெளியீட்டில் எங்களுடைய அபிப்ராயத்தை உணர்வதற்கு முடியும். அவர்களுடைய விடுதலைக்கு வழி என்ன என்பதை அவர்கள் சரிவர திட்டமிட்டு, தேசிய சுதந்திர அணியில் அவர்களும் வந்து அதை பலப்படுத்துவதற்கு உடனே முனைய வேண்டும். (சென்னை பிப்ரவரி 1945 எஸ்.சுப்பிரமணியம்).

bt ranadive

BT RANADIVE

இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களில் சில இன்று பயன்பாட்டில் இல்லை,அரசியல் முக்கியத்துவம் கருதி நிறைய வார்த்தைகள் கைவிடப்பட்டுள்ளன. மூலக்கட்டுரையை திருத்த முடியாது என்பதால் அவ்வாறே வெளியிடுகிறோம்.. ஆசிரியர் குழு.

தீண்டாமை நம்முடைய சமூகத்தின் தீமை. அதீதமான தீமை. மிகக்கொடிய தீமை. அதன் கொடுமையை எடுத்துரைக்க வார்த்தைகள் போதாது. மகாத்மா காந்தி அதை கண்டித்து எழுதியுள்ள வாக்கியங்களை விட வன்மையாக வேறொன்றும் கூறுவதற்கில்லை.

”பறையன்” என்று கூறி அவர்களை நாம் ஒதுக்கி வைத்துவிட்டோம் இந்த தீவினையின் பயனை நாம் அனுபவிக்கின்றோம் நாம் விதைத்த வித்தின் விளைச்சலை நாம் காண்கிறோம் பிரிட்டிஷ் காலணிகளில் நம்முடைய நாடே தாழ்த்தப்பட்டு ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கின்றது பஞ்சாப் படுகொலையில் பெயரெடுத்த ஜெனரல் டயர் ஓட்வையர் கையாண்ட கொள்கையையே நம்முடைய சுற்றத்தார் இடம் நாம் கையாள்கிறோம் அல்லவா தீண்டாதவர்கள் கிணறுகளை உபயோகிக்க கூடாது என்கிறோம் நாம் உண்டு மிஞ்சிய மிச்சத்தை அவனுக்கு தருகின்றோம் அவன் நிழல் பட்டால் பாவம் என்று கூக்குரல் விடுகின்றோம் இங்கிலீஷ் காரனை பார்த்து நாம் சாற்றக்கூடிய குற்றங்களை நம்மீது பறையர்கள் சாட்ட முடியும் என்று உள்ளம் கொதித்து எழுதினார் காந்தி அவர்கள்.(யங் இந்தியா 15/1/1921).

தீண்டாமை என்ற அநீதியை தேசிய இயக்கம் ஒதுக்கி வைக்க முடியாது. இந்து சமூகம் தீண்டாதவர் மீது சுமத்தி உள்ள இந்த ஈனமான அந்தஸ்தை எதிர்த்து தேசிய இயக்கம் வெகு நாட்களுக்கு முன்னரே போரிடத் தொடங்கியது. முதலாளிகளால் சுரண்டப்பட்டு வரும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கொள்வதற்கு முன்னரே, நிலச் சொந்தக்காரரிடம் வயிற்றை ஒடுக்கி, வாரம் கட்டி வரும் குடியானவர்கள் பிரச்சனைகளுக்காக போராட ஆரம்பிப்பதற்கு முன்பே, தீண்டாதவர் பிரச்சனையை தேசிய இயக்கம் எடுத்துக்கொண்டது.

காங்கிரசும் தீண்டாமையும்..

1920 ஆம் வருடம் நடந்த ஒத்துழையாமை இயக்கம் இந்தியாவில் உள்ள பொதுமக்களால் நடத்தப்பட்ட முதல் சுதந்திர இயக்கம். இந்தப் போராட்டத்தின் திட்டங்களில் முக்கியமான திட்டம் தீண்டாமை ஒழித்தல். தீண்டாமையை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் இணைத்து வைத்த கௌரவம் காந்திஜினுடையது. ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவராக அவர் இவ்விரண்டு விஷயங்களுக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். தேசத்தின் அரசியலில் தீண்டாமை பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக எடுத்து வைத்தவர் காந்திஜி. நாகபுரியில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் வருடாந்திர கூட்டம் பிரசித்தி பெற்ற கூட்டம். அக்கூட்டத்தில் தான் தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதாக முடிவு செய்தது, அதே மகாநாடுதான் காந்திஜியின் முயற்சியால் தீண்டாமை மிகப்பெரிய பாவம் என்று முடிவு கூறி பிரகடனம் செய்தது. காந்திஜி சலியாதபடி தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார் அவரது இடைவிடா பிரச்சாரம் கோடிக்கணக்கான இந்தியர் மனதில் ஆழப் பதிந்தது. தீண்டாதவர்களின்  சொல்லொணாத் துயர்களையும், அத்தியாவசிய கோரிக்கைகளையும், இந்தியர் உணர ஆரம்பித்தனர். ”தீண்டாமையை ஒழிக்காத வரையில் சுதந்திரம் வேண்டும் என்று கூறுவதற்கு எவ்வித தார்மீக உரிமையும் நமக்கு கிடையாது” என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் காந்திஜி கூறினார்.

சுதந்திரத்திற்கு என்று திரட்டப்படும் மாபெரும் பொதுஜன அணிவகுப்பில் மகத்தான ஒற்றுமையை காட்டும் முதல் முயற்சி 1920இல் நடந்தது. அதுதான், கிலாபத் கோரிக்கையையும், தீண்டாதவர்கள் கோரிக்கைகளையும் காந்திஜியும் காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. சுதந்திரத்திற்கு என்று போராடும் வீரர்களிடம் சம உரிமைகளை ஏற்றுக்கொண்ட ஒரு தேசிய ஐக்கியத்தை சிருஷ்டிக்கும் முயற்சி அது, சகல விதமான சந்தேகங்களைத் தீர்த்து சமூகத்திலுள்ள அக்கிரமங்களையும் அநீதிகளையும் கலைந்தெறிவதற்காக செய்யப்பட்ட முயற்சி அது. தேசமெங்கும் பரந்த வகையில் மலர்ந்த 1920ஆம் வருட போராட்டத்தில் தீண்டாமையை ஒழிப்பது சுதந்திர இயக்கத்தின் பகுதி என்பதை நம் நாட்டவர் உணர்ந்தனர். பத்து வருடங்களுக்கு பின்னர் கராச்சி காங்கிரஸ் கூடியது. பிரஜா உரிமை சாசனம் ஒன்றை தொகுத்தது. சுதந்திர இந்தியாவில் எல்லா பிரஜைகளுக்கும் சம அந்தஸ்து உண்டு என்று கூறிற்று. கிணறுகள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள் போன்ற பொதுவான இடங்கள் எல்லோருக்கும் தங்குதடையின்றி திறந்து வைக்கப்படும் என்று பிரகடனப்படுத்திற்று. இப்படி இந்த விஷயத்தை குறிப்பாக எடுத்துக் கூறுவானேன்?  தீண்டாதவர்களுக்கு சுதந்திர இந்தியாவில் எவ்வித தடைகளும் இருக்காது என்று வாக்குறுதி அளிப்பதற்காகவே தேசிய இயக்கம் தீண்டாதவர்களைப் பார்த்து அளிக்கும் உறுதிமொழி என்பது தெளிவு..

சீர்திருத்தப் போக்கு…

காங்கிரஸ் இவ்வாறே பிரகடனம் செய்து இருந்த போதிலும் சுதந்திர இயக்கத்தில் தீண்டாதவர்களை திரட்ட முடியவில்லை.ஏன்? இந்தப் பிரச்சனையை அரசியல் சம்பந்தமற்ற ஒரு பிரச்சனை என்ற கண்ணோட்டத்துடன் தான் பார்த்தனர். இது சரியான கண்ணோட்டம் அல்ல. இந்து சமூகத்திற்கு உள்ளேயுள்ள ஒரு பிரச்சனையாக கண்டனர். சமூக சீர்திருத்தத்தில் இதை ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டிருந்தனர். குருட்டு நம்பிக்கையினால் ஏற்பட்ட ஒரு குருட்டு பழக்கவழக்கம் தீண்டாமை, இந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்று பிரச்சாரம் செய்து விட்டால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கேடு ஒழிந்துவிடும் என்று காங்கிரஸ் நினைத்தது. இந்தக் கண்ணோட்டத்துடன் காங்கிரஸ் திட்டமிட்டது. அதனால் காங்கிரஸ் வகுத்த திட்டம் வெகு சீக்கிரத்தில் ஒரு சமூக சீர்திருத்த சேவையாக மனிதாபிமானத்தால்  உந்தப்பட்ட ஜன சமூக சேவை ஆகிவிட்டது. தீண்டாதவர்களுக்கு பள்ளிக்கூடங்கள், கல்வி வசதி, ஆலயத் திறப்பு முதலிய சில சீர்திருத்த அம்சங்களைக் கொண்ட இயக்கம் ஆகிவிட்டது. தீண்டாமையை ஒழிக்கும் இயக்கம் ”ஹரிஜன சேவா” சங்கத்தின் திட்டமாக மாறிவிட்டது. காங்கிரஸின் சுதந்திர போராட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது. இந்திய மகாஜனங்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் போராட்டத்துக்கும், போராட்டத் திட்டத்திற்கும் சம்பந்தமற்றுப் போய்விட்டது. தீண்டாதவர்களுடைய விசேஷ கோரிக்கைகளும், அவர்களுடைய அரசியல் கோரிக்கைகளும் காங்கிரஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகவில்லை..

உருப்படியான நடவடிக்கை தேவை…

தீண்டாதவர் பிரச்சனை என்பது ஏதோ சில ஆலயங்களில் அவர்களை அனுமதிப்பதுடன் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் தவறு. சில பொது ஸ்தலங்களில் அவர்களை அனுமதித்து விட்டால் இந்த தீமை ஒழிந்து விடும் என்பதும் தவறு. மத சம்பந்தமாக ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வை ஒழிப்பதனால் மட்டும் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்ற உணர்ச்சி அப்பொழுது இல்லை. சமூகத்தில் பல தலைமுறைகளாக தாழ்த்தப்பட்டு, சுரண்டப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்தவர்களின் நலன்களுக்காகப் போராடும் விஷயம் அது. வாழ்க்கை வசதிகள் பிடுங்கப்பட்டு பல்லாண்டுகளாக பொருளாதார அடிமைகளாகவே அவர்கள் வாழ வேண்டி நேர்ந்தது. கிராம வாழ்க்கையில் இருந்து விலக்கப்பட்டு ஊருக்கு வெளியே குடிசைகளிலும், சேரிகளிலும் அவர்கள் வாழும்படி நேர்ந்தது. அவர்களுடைய அந்தஸ்து தாழ்த்தப்பட்ட அந்தஸ்து. கிராம பண்ணை அடிமைகளாக வாழ்வதைத் தவிர வேறு வழியில் அவர்கள் ஜீவிப்பதற்கு இடமில்லை.

தீண்டாதவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு சொந்தமான நிலம் கிடையாது. இதனால் தீண்டாதார் ”பிறர் தயவில்” வாழ வேண்டி வந்தது. தீண்டாதவர் என்ற அடிமைச்சங்கிலி உறுதியாயிற்று. ஊருக்கு வெளியே சேரியில் காலங்கழித்து வந்தனர். வியாபாரத்தில் இறங்க முடியாது, தனிப்பட்ட ஜீவனோபாயம் ஒன்றுக்கும் வழியே கிடையாது. அவர்களது ஏழ்மைத்தனம், படித்து உத்தியோகங்களை தேட முடியாமல் செய்துவிட்டது. வியாபாரம் செய்யவும், வேறு தொழில்களை செய்யவும் சக்தியற்றவர்களாக ஆகிவிட்டனர். புராதன ஹிந்து சமூக பழக்க வழக்கம் அவர்கள் மீது பூட்டிய அடிமைத்தளைகள்  நாலா பக்கங்களிலும் அவர்களைத் தடுத்துக் கொண்டு நின்றன. இந்த கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கான விசேஷ முயற்சி செய்யப்படாவிட்டால் தீண்டாதவர்களின் அந்தஸ்து மாறமுடியாது..

இத்தகைய போராட்டத்தை நடத்த வேண்டியது தேசிய இயக்கத்தின் பொறுப்பு. ஹிந்து சமூகத்தில் இருந்து விலக்கப்பட்டு நிற்கும் நிலைமையை மாற்றியமைக்கும் படியான விசேஷ உரிமைகளையும் சட்டங்களையும் கூறுவது தேசிய இயக்கத்தின் பொறுப்பு. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் கல்வி, உத்தியோகங்கள், சமூக நிர்வாகம் ஒவ்வொன்றிலும் அவர்களுக்கு சமத்துவம் ஏற்படுத்தி, அவர்களுடைய சம அந்தஸ்தை உறுதியாக்கும் சட்டதிட்டங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதே முக்கியமான பிரச்சனை. சமமான சமூக அந்தஸ்தை தீண்டாதவர்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? படிப்பதற்கு விசேஷ வசதிகள் ஏற்படுத்த வேண்டும். உத்தியோகங்களிலும் நிர்வாகத்திலும் அவர்களுக்கு பங்களிக்க விசேஷ கவனம் செலுத்த வேண்டும். நில பாத்தியதையில் அவர்களுக்கு இல்லாத உரிமைகளை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சுருங்கச் சொன்னால் ஜீவனோபாயத்திற்கான வசதியை பிறர் தயவை எதிர்பார்க்காமல் வாழ்க்கை நடத்துவதற்கான தனி வசதியை அளிக்க தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தீண்டப்படுவோரை எதிர்நோக்கி வாழ்க்கை நடத்தும் அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும். அவர்களுடன் சம அந்தஸ்தை அளிக்க வேண்டும். தீண்டாதவர்களுக்கென்று ஒரு அரசியல் பொருளாதார உரிமை சாசனம் வகுக்கப்பட வேண்டும். இப்பேர்பட்ட சாசனம் தான் ஆறுகோடி தீண்டாதவர்களையும் தேசிய இயக்கத்தோடு ஐக்கியப்படுத்தும் அவர்களை தேசிய இயக்கத்தின் சுதந்திர அணிக்குள் சேர்த்து வைத்திருக்கும்.

துரதிஷ்டமாக காங்கிரசில் உள்ள போக்கு அத்தகைய விசேஷ உரிமைகளை கூறும் போக்கு அல்ல. சர்க்காரிடம் தேசிய கோரிக்கை போட்ட பொழுதெல்லாம் தீண்டாதவர்களுடைய உரிமைகள் குறிப்பிடப்படவில்லை. இந்து சமூகத்திற்கு உள்ளேயுள்ள பிரச்சனை என்று கருதிக்கொண்டு காங்கிரஸ் அந்தக் கோரிக்கைகளை குறிப்பிடாமல் விட்டு விட்டது. தீண்டாதவர் வகுப்பிலுள்ள பாமரர்களின் நம்பிக்கையை பெறவில்லை. தங்களுக்கு விசேஷ சலுகைகள் வேண்டும் என்று யாராவது கேட்டால் அது பிற்போக்கான கோரிக்கை எனக் கருதப்பட்டது. அதனால் அத்தகைய கோரிக்கைகள் எதிர்க் கப்பட்டன.

1935 ஆம் ஆண்டு காங்கிரஸ் லட்சக்கணக்கான தீண்டாதவர்களை தட்டி எழுப்ப முடியவில்லை. தேசிய இயக்கம் ஆரம்பித்த போராட்டங்களில் அவர்கள் பங்கெடுத்துக் கொள்ள வில்லை. காங்கிரஸ் மந்திரி சபைகள் அவர்களுடைய உரிமைகளை கவனிக்கவில்லை. தீண்டாதவர் சம அந்தஸ்தை அனுபவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளவில்லை. ஹோட்டலுக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட பரிபூரணமாக நிறைவேறவில்லை.“தீண்டாதவர் நுழையக்கூடாது” என்று போடப்பட்டிருந்த நோட்டீசை ஹோட்டல் காரர்கள் எடுத்து விடும்படி செய்தார்கள். காங்கிரசும், மந்திரிசபைகளும் இந்த உரிமையை நடைமுறையில் அவர்கள் அனுபவிப்பதற்கான நிர்ப்பந்தத்தை பொதுஜன கிளர்ச்சி மூலமோ,சட்டவிதிகள் மூலமோ ஏற்படுத்துவதற்கு ஒன்றும் செய்யவில்லை. இன்னும் பல கஷ்டங்கள் அவர்களுக்கு உண்டு. இவற்றைப் போக்க காங்கிரஸ் மந்திரிசபைகள் ஒன்றும் செய்யாததனால் தீண்டாதவர்களுடைய மனக்கசப்பு அதிகரித்தது. தீண்டாதவர்களுடைய இயக்கம் தேசிய இயக்கத்தின் வெள்ளப்பெருக்கில் சம்பந்தப்படாமல் தனியாக போய் விட்டது. அதனால் இன்றைக்கு அந்த இயக்கம் எங்கு போய் நிற்கின்றது என்பதை பார்ப்போம்.

தொடரும்…

Leave a Reply